பேச்சு - உலகைக் காக்கும் உழவன்- மு.மகேந்திர பாபு
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" என்றார் நம் வள்ளுவப்பாட்டன்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! - 'வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்!' என்றான் பாட்டுப் பாட்டன் பாரதி.உழவன் என்ற ஒருவன் இயங்குவதனாலே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர் 'உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும்" என்றனர். இந்த உலகத்தின் அச்சாணியாக இருந்து உலகைக் காக்கும் உழவனைப் பற்றித்தான் உங்களோடு உரையாட உள்ளேன்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நமது மதுரையின் மாபெரும் அடையாளமாக இருக்கும் நமது தமிழ் இயக்கத்தின் வேர்களே! விழுதுகளே! தமிழர் திருநாளாம் தைத்திருநாளைச் சிறப்பிக்கும் விதமாக 'உலகைக் காக்கும் உழவன்' என்ற தலைப்பில் சில கருத்துகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.
புலவனின் பேனா புத்தியைக் கூட்டும்.
உழவனின் கலப்பை நமக்குச் சக்தியை ஊட்டும். புலவன் இல்லையென்றாலும் உலகம் இயங்கும். ஆனால், உழவன் இல்லையெனில் உலக உயிர்களின் இயக்கம் முடங்கும். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்றிற்கும் மூன்று கடவுளர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போல ஆக்குவதும், காப்பதும் உழவன் கடமையாகிறது. அழித்தலை அவன் எப்போதும் செய்வதில்லை.
ஒரு மனிதன் இம்மண்ணில் வாழ மூன்று அவசியத் தேவைகள் உள்ளன. அவை உணவு, உடை, உறைவிடம். உடை இல்லாமல் ஆதி காலத்தில் மனிதன் மரப்பட்டைகளை ஆடையாக்கி வாழ்ந்தான். உறைவிடமாய் மரப்பொந்துகளை ஆக்கிக் கொண்டான். ஆனால் உணவில்லாமல் அவனால் வாழ இயலவில்லை. அதனால் நம் முன்னோர் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என, உணவு கொடுத்தோரை உயிர் கொடுத்தோர் எனப்போற்றினர். அத்தகைய உணவைத் தந்து உயிர்களைக் காக்கும் உழவனை நாம் இறைவன் என்று சொன்னாலும் அது மிகையில்லை.
'வேளாளன் என்போன் விருந்திருக்க உண்ணாதான்' என்பது நம் முன்னோர் கூற்று. ஆம். விவசாயிகள் தனக்கென எதையும் வைத்துக் கொள்வதில்லை. மக்களுக்காகவே தங்களை அவர்கள் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வாழ்வினை' அவர்கள் மக்களுக்குக் கற்றுத்தருகிறார்கள். தான் கவலையில் இருந்தாலும், தன்னைச் சுற்றி வாழும் மக்களின் பசிப்பிணையை அவர்கள் போக்குகிறார்கள். அதனால்தான் 'அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு' என்ற சொல்லாட்சி உருவானது. அதைவிட ஒருபடி மேலே போய் வள்ளுவப்பாட்டன் சொன்னான்.
'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை'. ஏர்த்தொழிலை நம்பியே மற்ற எல்லாத் தொழில்களும் இருக்கின்றன. 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது' என்பார்கள். ஆனாலும் உழுதவன் கணக்குப் பார்ப்பதில்லை. அவன் சிந்தனையில் உள்ள செயல் 'என் கடன் பணி செய்து கிடப்பதே!' என்ற எண்ணத்தில் கலப்பையைச் சுழல விடுகிறான்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அனைவர் வீடுகளிலும் திண்ணை என்ற அமைப்பு இருந்தது. நெடுந்தொலைவு பயணம் செல்பவர்கள் அதில் சற்று ஓய்வெடுத்துச் செல்வதுண்டு. அவ்வாறு அவர்கள் ஓய்வு எடுக்கையில் அந்த வீட்டின் உரிமையாளர் அவரை இன்முகத்துடன் வரவேற்று, விருந்து தந்து மகிழ்வார். அவர் உழவன் என்ற உன்னத மனிதராவார்.
பண்டைத் தமிழர்கள் நம் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். அதில் வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றழைத்தனர். அத்தகைய மருதமே உழவர் பெருமக்கள் நிறைந்த நிலப்பரப்பாகும். எண்ணங்களில் சிறந்தது வெண்மை. வண்ணங்களில் சிறந்தது பசுமை. வயல் வெளிகள் பச்சைப் பட்டுடுத்தியதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் பச்சைதான் தாவரங்கள். அந்தப் பச்சைதான் நெற்பயிர். அந்தப் பச்சைதான் நவதானியங்கள். சித்திரை மாதத்தில் அழகர் பெருமான் வைகை ஆற்றில் பச்சைப் பட்டுடுத்தி இறங்கினால் விவசாயம் செழிக்கும் என்ற எண்ணம் நம் மக்களிடம் உண்டு. அந்தப் பச்சையை வயல் வெளியில் உருவாக்கி, உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கி வாழ்வு தரும் ஒவ்வொரு உழவரும் நமக்கு அழகர்தான்.
அற்புதமான திரையிசைப்பாடல் ஒன்று உண்டு. திரைக்கவித்திலகம் ஐயா மருதகாசி எழுதிய பாடல்.
'ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை.
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை'. ஆம் நண்பர்களே! ஏர் முனை இருக்கும் வரை இந்தப் பூமிப்பந்தில் பஞ்சம் இல்லை. ஈட்டி முனை பிற உயிர்களைத் தாக்கும். ஏர் முனையோ உலக உயிர்களைக் காக்கும். அத்தகை ஏர் முனையைக் கையாள்பவன் உழவன்.
உழவன் வயலைப் பண்படுத்தி நமக்கு உணவு இடுகிறான். அதனால்தான் நமது பண்பாடு இன்றும் பட்டுப் போகாமல் இருக்கிறது. உணவு இல்லையெனில் பிற குற்றங்கள் தலைதூக்கும். குற்றம் தலைதூக்க ஒற்றுமை குறையும்.குலையும். நமது கலாச்சாரம் கவலை அடையும். ஒன்றிலிருந்து ஒன்று என்பதைப்போல உழவனில் இருந்தே எல்லா நன்னெறிகளும் தொடங்குகின்றன. சக்கரத்தின் இயக்கத்திற்கு அச்சாணி எப்படி முதன்மையோ அதுபோல உலகம் இயங்குவதற்கு உழவன் என்ற அச்சாணி தேவை. உலகைக் காப்பதே அவனது சேவை என்று கூறி வாய்ப்புத் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டி நிறைவு செய்கிறேன். வணக்கம்.
0 Comments