உழவையும் உழவனையும் போற்றும் பெருவிழா

 

உழவையும் உழவனையும் போற்றும் பெருவிழா - கட்டுரை. - இரா.ரெஜினா.


குறிப்புச்சட்டகம்


1.முன்னுரை

2.உழவும் உழவனும்

3.உழவு எனும் உயிர்காக்கும் தொழில்

4.தைத்திருநாள் எனும் தமிழர் திருநாள்

5.உழவன் எனும் இறைவன்

6.முடிவுரை


முன்னுரை:


      'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றான் நம் பாட்டுப் பாட்டன் பாரதி. உலகத்தின் தொழில்களில் வருமானத்திற்காக மட்டுமல்லாமல் பிற உயிர்களை வாழ வைக்கும் உன்னதமான தொழில் உழவுத்தொழில். உழவும் உழவனும் இல்லையென்றால் இந்த உலகம் இல்லை. அதனால் வான் புகழ் வள்ளுவப்பேராசான் உழவர்களைச் சிறப்பிக்கும் விதமாக '   ' என்ற அதிகாரம் படைத்தார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே அதிகாரம் கொண்ட ஒரு மனிதனாக, படைப்பவனாக இருந்தவன் யாரென்றால் அவன்தான் உழவன்.அத்தகைய உழவனைப் போற்றி நடத்தப்படுகின்ற ஒரு திருவிழாதான் தைத்திருநாள் எனும் தமிழர் பெருவிழா. இக்கட்டுரையில் உழவின், உழவனின் சிறப்புகளைக் காண்போம்.


உழவும் உழவனும்:


      'ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை

என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை' என்று திரைக்கவித் திலகம் மருதகாசி பாடல் ஒன்றை எழுதியிருப்பார். போர்முனைக்குச் செல்வதும், எதிரிகளைக் கொல்வதும் வீரம் எனக் கருதப்பட்டது. ஆனால் அதனினும் சிறந்தது எது தெரியுமா? அதுதான் ஏர்முனை. பேனாவின் முனை தாளில் பேசும்போது நமக்கு அறிவாற்றல் அக ஆற்றலாய் உருவாகும். ஏர் முனை நிலத்தோடு பேசும்போதெல்லாம் நமக்கு உடலில் ஆற்றல் அதாவது புற ஆற்றல் கிடைக்கும். உணவு இல்லையேல் உலகில் எந்த உயிரினமும் வாழவும் முடியாது. இவ்வுலகத்தை ஆளவும் முடியாது.


உழவு எனும் உயிர்காக்கும் தொழில்:


          உணவு, உடை, உறைவிடம் என இப்பூமியில் வாழும் மனிதருக்கு அவசியத் தேவைகள் என மூன்றைப் பகுத்து வைத்தனர் நம் முன்னோர். இம்மூன்றினுள்ளும் உணவு இல்லை என்றால் உலக உயிர்கள் எதுவும் நம் மண்ணில் வாழ இயலாது. வானம் வழங்குகின்ற நீரைக் குளங்கள், கண்மாய்கள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள் மூலம் சேமித்து, உற்ற நண்பனாம் காளைகள் மூலம் வயலை உழுது, நிலத்தைப் பண்படுத்தி, பக்குவப்படுத்தி, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, களைகளை நீக்கி, கதிராகக் களத்தில் சேர்த்து, உலகத்திற்குத் தந்து வாழ வைப்பவன் உழவன். மற்ற தொழில்கள் எல்லாம் பணம் சேர்க்கும் எண்ணத்தைக் கொண்டது. ஆனால், உழவுத்தொழில் ஒன்று மட்டுமே நல்ல குணம் சேர்க்கும் கொள்கை கொண்டது. ஆம்! பசி எனும் பிணியை நீக்கும் தொழில் உழவுத்தொழில். பசிப்பிணி நீங்காவிடில், பஞ்சமாபாதங்கள் தொடரும். அதனால் இவ்வுலகம் அழியும். அதனால் இவ்வுலகைக் காக்கும் ஆற்றல் படைத்த ஒரே மனிதன் உழவன் மட்டுமே.


தைத்திருநாள் எனும் தமிழர் திருநாள்:


    'ஆண்டினைப் பெரும்பொழுதாக ஆறு பகுதிகளாகவும், ஒரு நாளினைச் சிறுபொழுதாக  ஆறாகவும் பிரித்தனர் நம்முன்னோர். அதில் மார்கழி, தை மாதங்களை முன்பனிக்காலத்தில் வைத்தனர். ஆடியில் விதைத்த விதைக்கு ஐப்பசியில் களை எடுத்து கார்த்திகையில் அறுவடை செய்து மகிழ்வர். 'தைப்பொறந்தால் வழி பொறக்கும்' என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை அன்று முதல் இன்று வரை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவில் நமக்கு உதவிய காளைகளையும், உழவனையும் கொண்டாடும் பெருவிழாவாகத் தைத்திருநாள் திகழ்கிறது. இன்று இயந்திரக் கலப்பைகள், கருவிகள் வந்தாலும் இன்றும் பல கிராமங்களில் காளைகள் மூலம் ஏர் நடத்தி உழவு செய்யும் முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது. மண்ணையும் மக்களையும் காக்கும் கடவுளாக உழவன் இருப்பதால் இது தமிழரின் தலையாயத் திருவிழாவாகும்.


உழவன் எனும் இறைவன்:


      எத்தனையோ தொழில்கள் இன்று இணையத்தின் மூலம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும், வயலுக்குச் சென்று உழவன் வேலை பார்த்தால்தான் நமது வயிறு நிறையும். 'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கு எல்லாம்' என்றான் மாகவிஞன் பாரதி. அத்தகைய உணவினைத் தந்து உயிர்கள் வாழ உதவி செய்பவன் உழவன். பிறரின் பசிப்பிணியை நீக்குதல் அறம் எனக் கருதியவர்கள் நம் முன்னோர். விருந்தினரைப் பேணுதலும், நண்பர்களைக் காணுதலும் தைத்திருநாளின் மகிழ்வான செயலாகும். உலகைக் காக்கும் ஆடையில்லா அரை மனிதனாக உழவன் இருந்தாலும் அவன் தான் என்றும் நடமாடும் இறைவன்.


முடிவுரை:


   'உழவையும் உழவனையும் காக்கும் பெருவிழா' தமிழர் திருவிழாவாம் தைத்திருவிழா. உழவு இருக்கும் வரை உழவன் இருப்பான். உழவன் இருக்கும் வரை உணவு இருக்கும். உணவு இருக்கும் வரை உயிர்கள் உலகில் மகிழ்வாய் நடமாடும் என்று கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.

Post a Comment

0 Comments