சமத்துவம் வளர்க்கும் பொங்கல்

 


பேச்சு - சமத்துவம் வளர்க்கும் பொங்கல் - மு.மகேந்திர பாபு.

 மு.இரம்யா - 9384486947


தமிழர் திருநாளாம் தைத்திருநாளை என்போன்ற மாணவச்செல்வங்களிடம் சமத்துவம் வளர்க்கும் பொங்கல் விழாவாகப் பேசி மகிழச்செய்து கொண்டிருக்கும் மதுரை தமிழ் இயக்கம் அமைப்பைச் சேர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது முதற்கண் வணக்கம்.


தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு

அமிழ்தம் அவனது மொழியாகும்

அன்பே அவனது வழியாகும்!

 என்றார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். தமிழனின் குணம் என்ன தெரியுமா? அதுதான் சமத்துவம், சகோதரத்துவம். தமிழரின் விழாக்கள் ஒற்றுமை உணர்வை வளர்ப்பவை. மதம் கடந்து மனம் நுழைபவை. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு மிக்கவை. அதில் சிறந்த மாதம் தைமாதம்.


   'தைப் பொறந்தா வழி பொறக்கும்' என்பது தமிழரின் கூற்று. ஆம்! நண்பர்களே! தைப்பொறந்தால் வழி பொறக்கும். மக்களின் வலி மறக்கும். ஆடிப்பட்டம் தேடி விதைத்த நெல் மணிகளை ஐப்பசியில் களை எடுத்து தை மாதத்திலே அறுவடை செய்வோம். அப்படி அறுவடை செய்த புதிய நெல்லில் இருந்து புத்தரிசி எடுத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து நண்பர்கள் அனைவருக்கும் தந்து மகிழ்வோம். அப்படிப்பட்ட பொங்கல் திருநாள் சமத்துவம் வளர்க்கும் திருநாளாக இருப்பதைத்தான் உங்களிடம் பேச வந்துள்ளேன்.


     ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில் 

அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்றான் பாட்டுப்பாட்டன் பாரதி. அதுபோல மதங்கள் பலப்பல இருந்தாலும் அவற்றை எல்லாம் ஓரங்கட்டி, அன்பினை மட்டுமே மனதில் ஒட்டி நடத்தப்படும் திருவிழாதான் பொங்கல். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதுதான் நமது இந்தியத் திருநாட்டின் தாரக மந்திரம். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்றவர் நம் தமிழ்ப்பெருமக்கள்.  


   வானம் தந்த அருட்கொடையாம் மழைநீரால் பயிர்கள் வளர, உயர்கள் செழிக்க அதன் பயனாய் அறவடைத்திருவிழாவை தமிழர் வாழும் தேசமெல்லாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

வெறும் பொங்கல் வைத்து இனிப்பை மட்டும் பரிமாறாமல் இதயங்களையும் பரிமாறுகிறோம். 


  எங்கள் குடியிருப்பில் நடந்த பொங்கல் திருவிழாவைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.  அற்புதமான பொங்கலையும் சுண்டலையும் நாராயணன் என்ற பெரியவர் அனைவருக்கும் அன்பளிப்பாகச் செய்து தந்தார். பொங்கல் விழாவுற்கு மேடை, ஒலி பெருக்கி வசதிகளை டேவிட் என்பவர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.எங்கள் குடியிருப்பின் மூன்று தெருக்களிலும் பொங்கல் திருநாள் விளம்பரப் பதாகைகளை பக்ருதீன் என்பவர் செய்து தந்தார். இப்போது தெரிகிறதா எங்கள் குடியிருப்பில் சமத்துவப் பொங்கல் எவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்று? 


  பொங்கல் விழாவில் ஏழை - பணக்காரர், உயர்ந்தவர்- தாழ்ந்தவர், ஆண் - பெண், சிறியவர் - பெரியவர் என எந்தப் பாகுபாடும் பார்க்காது மிக அருமையாகக் கொண்டாடி மகிழ்ந்தோம். அனைவரும் ஒன்று பட்டுக் கொண்டாடினோம். மற்ற விழாக்கள் எல்லாம் ஒரேநாளில் முடிந்துவிடும். ஆனால், தைத்திருநாளாம் தமிழர் திருநாள்தான் மூன்று நாள்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழாவாக இருக்கிறது. 


  விழா என்றாலே கொண்டாட்டம்தான். கொண்டாட்டம் என்றாலே விளையாட்டுகள்தான் நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பல்வேறு கிராமிய விளையாட்டுக்களை நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம். பாட்டிலில் நீர் நிரப்புதல், வேகநடை, புதையல் வேட்டை, உரி அடித்தல் என சிறுவர் முதல் பெரியவர் விளையாடி மகிழ்ந்தோம். 


பொங்கல் என்றாலே கட்டிக்கரும்பும், வீரத்தைப் பேசும் காளைகளை அடக்குதலும்தானே. நண்பர்களோடு கரும்பை உண்டோம். எல்லார்க்கும் கொடுத்து உண்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் இருக்கிறது? அதனால்தானே நமது வான் புகழ் வள்ளுவப் பேராசான்,


'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்றார். அதனால் நாங்கள் அனைவரும் மகிழ்வித்து மகிழ்ந்தோம். என்போன்ற மாணவரின் மன வயலில் சமத்துவம் எனும் பயிரை இப்பொங்கல் திருநாள் விதைத்துச் சென்றுள்ளது. மனங்களைச் சமத்துவத் திருநாளாய் வென்றுள்ளது என்று கூறி, வாய்ப்புத் தந்தமைக்கு வாய்மொழி கேட்டமைக்கும் நன்றி கூறி நிறைவு செய்கிறேன். நன்றி.

Post a Comment

0 Comments