கவிதை - கலப்பைக்கு வணக்கம்!
உலகக் கருவிகளில்
உன்னதக் கருவி கலப்பை.
கவிதையில் புனைகிறேன்
அதன் சிறப்பை.
வானம் பார்த்து
கடவுளுக்கு வணக்கம்.
வாழ்வை உயர்த்தும்
கலப்பைக்கும் வணக்கம்.
நடமாடும் தெய்வமாம்
உழவனின் இருப்பை,
மருத நிலத்தின் சிறப்பைச்
சொல்லும் கருவி கலப்பை.
மண்ணைக் கீறும்போது
மனிதம் பிறக்கும்.
மகசூல் வீட்டிற்குவர
தைத்திருநாள் சிறக்கும்.
தங்கத்தினும் உயர்ந்தது
இரும்பாலான கலப்பை.
தன்னலமின்றி உயர்த்துகிறது
மக்களின் பிழைப்பை.
கையுடன் கைசேர
அன்பு பரிமாறும்.
வயலுடன் கலப்பை சேர
வசந்தம் சேரும்.
வானம் நீரால்
வயலைத் தொடும்.
வாழக்கை முழுவதும்
வெளிச்சம் படும்.
விதை முளைத்து
இலை விட்டுப் பயிராகும்.
பூ விரிந்து கனியாகி
அனைவருக்கும் உயிராகும்.
கலப்பை எனும்
இரும்பு தெய்வமே!
உன்னால் மட்டும்தான்
உலகம் உய்யுமே!
வானம் பார்த்து
கடவுளுக்கு வணக்கம்.
வாழ்வை உயர்த்தும்
கலப்பைக்கும் வணக்கம்.
0 Comments