11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - நம்மை அளப்போம் - பகுதி 2 - பாடப்பகுதி சிறுவினா - வினாக்களும் விடைகளும் / 11 TAMIL - EYAL 1 - SMALL QUESTIONS & ANSWER

 

                     வகுப்பு - 11 , தமிழ்

இயல் 1 - நம்மை அளப்போம் - பகுதி - 2

சிறுவினா - புத்தகம் , பக்கம் எண் - 22



****************   **************   **********

சிறுவினா 

1 ) சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

               தமிழ்மொழிப் பற்றி பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாட வேண்டும். காலத்தால் அழியாத பழமை வாய்ந்த கனிமங்களின் உரமெல்லாம் சேரப் பாடத்தான் வேண்டும்.

2 ) நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

i ) முகவுரை என்பது நூலுக்கு முன் சொல்லப்படுவது.

ii )  முகவுரையில் நூலின் இயல்பு. ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர் பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு, நூலின் பெயர், தொகைவகை, விரி என்பவனவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர்(மாணவர்), நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்.

iii )  இந்த எட்டுச் செய்திகளும் நூல் ஒன்றின் முகவுரையில் இடம் பெற வேண்டும் என நன்னூல் குறிப்பிடுகிறது.

3 ) என்னுயிர் தமிழ்மொழி என்பேன்  என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.

i ) என் தாய் மொழி தமிழில் பிறமொழி சொற்கள் கலவாமல் நான் பேசுவதோடு மட்டுமல்லாமல், என் உறவினர், நண்பர்களையும் தூய தமிழில் பேச முயற்சி மேற்கொள்வேன்.

ii )  வீறுநடை கொண்டு உலகம் முழுவதும் என் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றுவேன்.

iii ) நான் எங்கு இருந்தாலும் என் தாய்மொழி தமிழுக்கு முதல் இடம் தருவேன். தாய்மொழியை வளப்படுத்துவேன். பல உயர்ந்த தமிழ் இலக்கியங்களைப் படைத்த தமிழ் அறிஞர்களைப் பெருமைப்படுத்த என்னால் இயன்றதைச் செய்வேன்.

(iv) தமிழ் மொழியில் எண்ணற்ற நூல்கள் உருவாகவும், உலகில் சிறந்த வேற்றுமொழி படைப்புகளை தமிழாக்கம் செய்யவும் தமிழ் ஆட்சி மன்றக் குழுவிடம் விண்ணப்பம் செய்வேன்.

(v )  மக்களின் பெயர்கள். அங்காடிகளின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள் போன்றவைகள் எல்லாம் தமிழ்ப் பெயர்களாகவே இருக்க என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன்.


4 ) கூற்று - குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று: நினைவுகூரத்தக்க தருணங்களைப்
பதிவு செய்வதாகும்.

கவிதை -  கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க.

கூற்றில் குறியீடு எனக் குறிப்பிடப்படுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?

i ) கிளி இருப்பது கூண்டில். அக்கூண்டைத் திறந்தாலும் கிளி வெளியே வருவது சிறகடித்துப் பறப்பதற்கு அல்ல. சீட்டெடுப்பதற்காகத்தான்.

ii )  இக்கவிதையில் நினைவு கூரத்தக்கத் தருணம் என்பது ஓர் அடிமையின் வாழ்க்கை முறை என்ற குறியீடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 ) மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.

மொழி முதல் எழுத்துகள் 22 : உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். மெய்யெழுத்துகள் மெய்வடிவிலேயே சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துகளோடு
சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன. மெய்களில் க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும். (ஙனம் என்னும் சொல்லில் மட்டுமே ங வரும்).

எ.கா :

i ) அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உடை, ஊர், எடு, ஏர், ஐயம், ஒன்று, ஓணான், ஒளவை.

ii ) கண்ணன், சந்தம், தண்ணீர், நண்டு, படை, மலை, வயல், யவணர், ஞமலி, ஙனம் (விதம்)

மொழி இறுதி எழுத்துகள் - 24 :

          உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினோரெழுத்தும் சொல்லின் இறுதியில் வரும். பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.

எ.கா :

i ) பல, வினா, கரி, தீ, கடு, பூ, மேலே தை, நொ, போ, கௌ - உயிர்மெய்யோடு கூடி இறுதியில் வந்தது.

(i) உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வாள் - மெய்யெழுத்துக்கள் இறுதியில் வந்தன. எஃகு, இருபஃது - குற்றியலுகரம் இறுதியில் வந்தது.

**************      **************    ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

0 Comments