மாடித்தோட்டம் போடலாம் வாங்க ! பாடல் - மு.மகேந்திர பாபு.
மனமிருந்தால் மாடித்தோட்டம் போடலாம் - சின்ன
வனம்போல மொட்டை மாடியும் முழுமையாகலாம்
சின்னச் சின்ன செடிகளாலே நிறைந்திடுமே ! - உள்ளம்
பசுமை கண்டு வெறுமை நம்மில் குறைந்திடுமே !
வயலிலதான் வரப்பக் கட்டித் தோட்டம் போட்டோம் - அப்ப
வயலும் வாழ்வும் கருத்துக்களை வானொலியில் கேட்டோம்
வீட்டு முன்னே தோட்டம் போட்டோம் நாமதான் - இப்ப
மாடித் தோட்டம் நமக்கு ரொம்ப தேவைதான்
நகர்வதற்கும் இடமுமில்லே பெரும் நகரத்தில - தினம்
நாலு வார்த்த பேசக்கூட நேரமில் நண்பர்களோட !
கவலைகளை விட்டுவிட்டு மாடிக்குப் போங்க - நல்ல
காத்து வந்து உடல் தழுவும் சுவாசித்து வாங்க
நஞ்சில்லா காய்கனிய இனி நாம உண்ணலாம் - வீட்டு
மொட்டை மாடியில் சின்னதொரு தோட்டம் பண்ணலாம்
கத்தரி வெண்டை தக்காளி செடியும் - இனி
நம் கண்முன்னே பூத்துக் காய்க்க வைக்க முடியும்
சின்னச் சின்ன தொட்டிகளில் செடி முளைக்கும் - அது
சின்னப் பிள்ளை போல நின்னு பூத்துச் சிரிக்கும்
காய்கனியப் பாக்கும் போது மனசு திளைக்கும் - கீரை
வகைகளைத்தான் பறிச்சுத் தின்ன உடம்பு நிலைக்கும்
காலை மாலை செடிகள்கிட்ட பேசிப் பாருங்க - ஒரு
தனிமை வந்து ஒட்டிக்குமா நீங்க கூறுங்க
இயற்கை உரம் போட்டு வளர்த்த செடிதானுங்க - நம்ம
இல்லத்தில இனிிமை பொங்கும் இனிதானுங்க.
மு.மகேந்திர பாபு.
0 Comments