பால்யம் என்றொரு பருவம்
பித்தான்களற்ற டவுசரின்
இரு முனைகளைத்
தொப்புளோடு இறுகக்கட்டி ,
சட்டையில்லா மேனியோடு
வெயில் , மழையென இரண்டையும்
ஒன்றாகப் பாவித்து ஓடியாடிய பருவம்.
டவுசர் பைகளை
புளியங்கொட்டைகள் நிறைக்க ,
சிமெண்ட் கல்லினால்
மந்தையம்மன் கோவில் பொட்டலில்
செதுக்கி முத்து விளையாடிய காலம்.
கிட்டிக்குச்சி விளையாட்டில்
தோற்ற பின்பு
கபடி என மூச்சு இழுத்து
மின்னலென ஓடி எல்லைக் கோட்டைத்
தொட்டதொரு காலம்.
சாட்டையால் சுழற்றி
தரையில் பம்பரம் விழாமலே
கையில் பம்பரத்தை ஆடவைத்து
மகிழ்ந்த காலம்.
கோலிக்குண்டு வாங்குவதற்காக
வயல்காட்டில் வேலை பார்த்தும் ,
பருத்தி எடுத்து எடைக்கு எடை
பலாக் கொட்டை வாங்கியும்
மகிழ்ந்த காலம்.
சனி , ஞாயிறு விடுமுறை நாட்களில்
கண்மாயில் நிலா நீச்சல்,
முங்கு நீச்சல் , எம்.ஜி.ஆர் நீச்சலென
மணிக்கணக்கில் நீந்தியதொரு காலம்.
ஆசிரியர்களிடம் வாங்கிய அடிகளைப்பற்றி
அப்பா அம்மாவிடம் சொல்லாமல்
சிவந்து இரத்தம் கண்டிய கைகளைப்பார்த்தும்
ஆசிரியர் மேல் பயமும் , மரியாதையும்
கூடிய காலம்.
பாட்டு கிளாஸ் , ஸ்போக்கன் இங்கிலீஷ்
என எந்த தனி வகுப்பிற்கும்
சிக்காமல் பறவையென
பாடித்திரிந்த காலம்.
மிதுக்கம் பழமும் , பனம் பழமும் ,
கள்ளிப் பழமும் , ்
மஞ்சனத்திப்பழமும் , இலந்தைப்பழமும்
விலையின்றிக் கிடைத்து
வேதிப்பொருள் கலப்படமின்றி
விரும்பித் தின்ற காலம்.
கம்மங்கருதும் , கேப்பக்கருதும்
தீயில் வாட்டி கமகம வாசத்துடன்
திகட்டத் திகட்டத் தின்ற காலம்.
பால்யம் என்றொரு காலம்
என் பால்யத்தில் இருந்தது.
எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி
சிறுவர்களைச் சிறுவர்களாக்கி !
மு.மகேந்திர பாபு ,
0 Comments